1. நெஞ்சு பதைக்கும் நிலை

ரும்பு தந்த தீஞ்சாறே
கனி தந்த நறுஞ்சுளையே,
கவின்செய் முல்லை
அரும்புதந்த வெண்ணகையே
அணிதந்த செந்தமிழே
அன்பே, கட்டி
இரும்புதந்த நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலை
ஈடழித்து
வரும் புதுமை நினைக்கையிலே
நெஞ்சு பதைக்கும் சொல்ல
வாய் பதைக்கும்.
எடுத்து மகிழ் இளங்குழந்தாய்,
இசைத்து மகிழ் நல்யாழே,
இங்குள்ளோர் வாய்
மடுத்துமகிழ் நறுந்தேனே
வரைந்துமகிழ் ஓவியமே,
அன்பே, வன்பு
தொடுத்துமகிழ் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
தோன்றா வண்ணம்
தடுத்துவரல் நினைக்கையிலே
நெஞ்சுபதைக் கும்சாற்ற
வாய்ப தைக்கும்
பண்டுவந்த செழும்பொருளே
பார் அடர்ந்த இருட்க்காட்டில்
படிந்த மக்கள்
கண்டு வந்த திருவிளக்கே
களிப்பருளும் செந்தமிழே,
அன்பே வாழ்வில்
தொண்டுவந்த நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
துளிக்கா வண்ணம்
உண்டுவரல் நினைக்கையிலே
உளம்பதைக்கும் சொல்வதெனில்
வாய் பதைக்கும்
உடலியக்கும் நல்லுயிரே,
உயிரியக்கும் நுண்கலையே
மக்கள் வாழ்வாம்.
கடலியக்கும் சுவைப்பாட்டே
கண்ணான செந்தமிழே,
அன்பே, நாட்டில்
கெடல் இயக்கும் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைக்
கெடுக்கப் பாடு
படல்தன்னை நினைக்கையிலே
நெஞ்சுபதைக் கும்பகர
வாய்ப தைக்கும்.
வையத்தின் பழநிலவே
வாழ்வுக்கோர் புத்துணர்வே,
மயிலே, மேலோர்
ஐயத்திற் கறிவொளியே,
ஆடல்தரும் செந்தமிழே,
அன்பே, தீமை
செய்யத்தான் நெஞ்சுடையார்
துறைதோறும் நின்னெழிலைத்
தீர்க்க எண்ணும்
மெய்யைத்தான் நினைக்கையிலே
நெஞ்சுபதைக் கும்விளக்க
வாய்ப தைக்கும்.